லண்டன் தமிழர் சந்தையில் ஐபிசி தமிழ் - உச்சி தமிழ்மாண்புக்காட்சிக்கூடம்
லண்டன் தமிழர் சந்தை’ (London Tamil Market) இன்றும் நாளையும் (சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு) லண்டன், ஹரோவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது பைரன் ஹால், கிறிஸ்ட்சர்ச் ஏவ், ஹாரோ HA3 5BD (Byron Hall, Christchurch Ave, Harrow HA3 5BD) என்னும் இடத்தில் இடம்பெறவுள்ளது.
பிரித்தானியாவில் தமிழர் வணிகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பிரித்தானியத் தமிழ் வணிகச் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள இந்தப் பெருநிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தமிழர் நிறுவனங்கள் தமது சேவைகளையும் விற்பனைப் பண்டங்களையும் காட்சிப்படுத்தவுள்ளனர்.
உச்சி வலைத்தளம்

அதேவேளை, தொண்ணூற்று மூன்றாம் (stall no 93) இலக்கக் கூடத்தில் ஐபிசி தமிழின் ‘உச்சி தமிழ் மாண்புக்காட்சிக்கூடம்’ நிறுவப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் புதிய தலைமுறையினர் தமிழின் தனிச்சிறப்பை உணரும் வகையில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலான விளக்கங்களும் இங்கே காட்சிப் படுத்தப்படவுள்ளன.
தமிழும் கலையும் பயிலக்கூடிய தளமாக ஐபிசி தமிழ் உருவாக்கியுள்ள uchchi.com வலைத்தளம் பற்றி அறிந்து கொள்வதற்கும் uchchi.com இன் கற்கை நெறிகளை (online courses) சிறப்பு விலைச்சலுகையில் பெற்றுக்கொள்வதற்கும் இது நல்வாய்ப்பாகும்.

மேலும், இங்கே இளையோருக்கான வேடிக்கையான மொழிப்புதிர்ப்போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் தலைமுறையினர் தமிழை மறந்து விடுவார்கள் என்ற கவலை புலம்பெயர் நாடுகளில் பரவலாக உள்ள நிலையில், இன்றைய தொழினுட்ப யுகத்துக்கு ஏற்றபடி தமிழைப் போதிக்கும் ஒரு தளமாக ‘உச்சி’ உருவாகியுள்ளது.
தமிழின்பால் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இந்த வேலைத்திட்டத்தை ஆதரிக்க வேண்டியது இன்றியமையாதது.
இந்த நிலையில் ‘உச்சி: தமிழ் மாண்புக்காட்சிக்கூடத்துக்குத் திரண்டு வந்து ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
‘மெல்லத் தமிழினிச் சாகும், மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று தமிழ்த்தாய் அஞ்சியதாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மகாகவி பாரதி பாடினார். ‘இல்லை, தமிழ் ஏற்றம் பெற்று விளங்கும்’ என்னும் செய்தியைச் சொல்லும் வகையில் உச்சி வலைத்தளம் உருவாகியுள்ளது.