ஐரோப்பிய நாடாளுமன்றத்தை நோக்கி நகர்கிறது புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் பரப்புரைப் பயணம்
சிறிலங்கா குறித்த நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கிய ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் சிறிலங்காவில் ஈழத்தமிழினத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அனைத்துலக அரங்கில் நீதிகோரும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
அந்தவகையில் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் பரப்புரைப்பயணங்கள் ஒரு வாரத்தை கடந்து தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் இன்று தனது பத்தாம் நாள் பயணத்தை பிரான்சில் கடந்துள்ளது.
பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க் ஆகிய நாடுகளைக் கடந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல மாநகர மற்றும் நகர சபைகளை கடந்த இந்த பயணக்குழு அந்தந்த மையங்களுடன் சந்திப்புக்களையும் நடத்தியிருந்தது.
தற்போது பிரான்ஸ் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவரும் செயற்பாட்டாளர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஸ்ரார்ஸ்பேர்க் பகுதியில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.