குப்பையில் அதிஷ்ட இலாப சீட்டை வீச இருந்தவருக்கு அடித்த அதிஷ்டம் -குவியவுள்ள டொலர்
மனக் குழப்பத்தால் குப்பையில் வீசுவதற்கு தயாரான அதிஷ்ட இலாப சீட்டின் இலக்கத்தை கடைசியாக பார்த்த பெண்ணுக்கு அதிஷ்டம் அடித்ததை அடுத்து அவர் மகிழ்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வசிக்கும் 60 வயதான ஜாக்குலின் லே என்பவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
உள்ளூர் உணவுச் சந்தை ஒன்றில் இருந்து சுமார் 6 டொலர் மதிப்பிலான அதிஷ்ட இலாப சீட்டை வாங்கியுள்ளார் ஜாக்குலின். ஆனால் பரிசை வெல்லும் நம்பிக்கை அவருக்கு அறவே இருக்கவில்லை.
இதனால் அந்த சீட்டை குப்பையில் வீசுவதற்கு முன்னர் ஒருமுறை பரிசு இலக்கங்களை சரி பார்க்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையிலேயே தமது சீட்டுக்கு 200,000 டொலர் பரிசு கிடைத்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.
ஒரு நொடி நம்ப முடியாமல் வாய்விட்டு கத்தியதாக கூறும் ஜாக்குலின், உடனடியாக தனது மகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
தற்போது மாகாண வரிகள் நீக்கப்பட்டு, 142,021 டொலர்கள் அவரது கணக்கில் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. ஒரு சிறு மனக் குழப்பத்தால் பெருந்தொகையை இழக்க இருந்த அவருக்கு இறுதி நேரத்தில் அவர் செய்த செயலால் இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

