236 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
நேபாளத்திலிருந்து துருக்கி நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேபாளத்தின் காத்மாண்டு நகரிலிருந்து இன்று (பிப்ரவரி 4) மதியம் சுமார் 2.49 மணியளவில், தர்க்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 236 பயணிகளுடன் துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடி அனுமதி
இதனையடுத்து, விமானத்தின் வலது பக்க என்ஜீனில் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த விமானி, உடனடியாக கொல்கத்தாவின் சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கத்திற்கான அனுமதியை கோரினார்.

Image Credit: ThePrint
அதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் பாதுகாப்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பயணித்த 236 பேரும் விமான பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விமானத்தின் என்ஜீன்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பயணிகள் தங்கள் பயணத்தை தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |