நாட்டில் பிரபாகரனுக்குப் பின்னர் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியவர்கள் இவர்களே - படுகொலைகளை பகிரங்கப்படுத்திய தேரர்!
ஜே.வி.பியினர் மக்கள் விடுதலை முன்னணி என்று கூறிக்கொண்டு திரிந்தாலும் இன்னமும் அதே கொடிய கட்சி தான் என்றும் கடந்த காலங்களில் ஜே.வி.பி நாட்டிற்கு செய்த அழிவுகளை மக்கள் மறக்கவில்லை என்றும் பௌத்த தேரர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தாங்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு குழுவிடம் நாட்டின் ஆட்சி சென்றால், ஏற்படும் சூழ்நிலையை எவரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்றும் மேல் மாகாண அதிகார சங்கநாயக்க வண.திஹாகொட பத்திய தேரர் பாரிய குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
பாரிய அழிவை ஏற்படுத்தியவர்கள்
மக்கள் விடுதலை முன்னணியின் பௌத்த விவகாரங்களின் தலைவராக நியமிக்கப்பட்ட தனவர்தன குருகேவுடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை மக்கள் விடுதலை முன்னணி செய்துள்ளது. கடந்த காலத்தை அறியாத இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சுற்றித் திரண்டு வருகின்றனர்.
படுகொலைகள்
தலதா மாளிகை மீதான தாக்குதல், பிக்குகள் படுகொலை, அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற பல அழிவுச் செயல்களுக்கு ஜே.வி.பி பொறுப்பேற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை” எனவும் தெரிவித்துள்ளார்.
