தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஊடகப்பேச்சாளர்) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் இன விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் அஹிம்சை வழியில் போராடி, தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாக தீபம் தீலிபனின் நினைவூர்தி மீதான தாக்குதலை கண்டிப்பதற்கு எம்.ஏ.சுமந்திரன் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காடையர்களின் கொடும்தாக்குதல்
தியாக தீபம் தீலிபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட நினைவூர்தியையும் அதில் இருந்த திலீபனின் திருவுருவ படத்தையும் சிங்கள காடையர்கள் அடித்து சேதப்படுத்திய சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பிலுள்ள பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன், திலீபனின் தியாகத்தையும் தமிழ் மக்களின் நினைவுகூருவதற்கான உரிமை மறுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
எனினும் நேற்றைய சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காவல்துறையினர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது வெட்கக்கேடான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விசனத்தை ஏற்படுத்திய பதிவு
தாக்குதல்தாரிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் என கூறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக வாய்ச் சொல்லில் கூறுவதை விடுத்து செயலில் அதனை காண்பிக்குமாறும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரிரான் அலஸ், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் சேதமாக்கப்பட்டமை மற்றும் நினைவுகூருவதற்கான உரிமை மறுக்கப்படுகின்றமை தொடர்பாக அந்தப்பதிவில் எந்தவொரு கருத்தையும் எம்.ஏ.சுமந்திரன் வெளியிடாமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத வழிப் போராட்டத்தை வெளிப்படையாக விமர்சித்திருந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை புலிகளின் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத தனது மனோ பாவத்தை தனது எக்ஸ் பதிவின் ஊடாக வெளியிட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிலைமாறு கால நீதியின் கீழ் நினைவுகூருவதற்கான உரிமையை வலியுறுத்த தவறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் ஏனைய உரிமை மற்றும் நீதி சார்ந்த விடயங்களில் நேர்மையுடன் செயற்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய பரப்பிலுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.