விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி
இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அபயராமை விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
புதிய பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நேற்று முன்தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த நியமனத்தை எதிர்ப்பதாக கத்தோலிக்க திருச்சபை அறிக்கை வெளியிட்டிருந்தது.
விடுதலைப்புலிகளுடனான போர்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தேஷபந்து தென்னகோன் தவறியுள்ளார் எனும் குற்றச்சாட்டையும் கத்தோலிக்க திருச்சபை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின், விடுதலைப்புலிகளுடனான போரை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்கு யார் பொறுப்பேற்பது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள எதிர்ப்புக்கு பின்னால் வேறு மறைக்கப்பட்ட திட்டங்கள் இருப்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை கத்தோலிக்க திருச்சபை ஏன் எதிர்க்கிறது எனவும் அவர் சிங்கள பௌத்தர் எனும் காரணத்தை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேஷபந்து தென்னகோனின் நியமனம்
இலங்கையில் சிங்கள, முஸ்லீம், தமிழ் என அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்கள் இருப்பதாகவும், கத்தோலிக்க திருச்சபை தேவையற்ற மத ரீதியான பிரச்சனைகளை தூண்ட முயற்சிக்க கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாநாயக்க தேரர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களில் கத்தோலிக்க திருச்சபைக்கு ஆதரவளிப்பதாகவும் அதனை இல்லாது செய்யும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமெனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கோரியுள்ளார்.
இதேவேளை, தேஷபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அறிவிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை குற்றம் சாட்டியுள்ள நிலையில், மகாநாயக்க தேரர்களுக்கும் இது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |