தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு
இலங்கையில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு அதிபர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
சந்தேக நபர்கள்
அத்துடன் விசாரணைகளின் அடிப்படையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும், விடுவிக்கப்பட வேண்டியவர்களை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு மற்றும் நீதி அமைச்சுக்களுக்கு அதிபர் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் அதனடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் பத்திரிகை
அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர்களாக இருக்கும் நபர்களின் மீதான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இந்த வருட இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
