சந்திரனுக்கு புதிய நேர மண்டலத்தை உருவாக்க நாசா தீர்மானம்!
சந்திரனுக்கான விண்வெளிப்பயணங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் சந்திரனுக்கான நேர மண்டலத்தை உருவாக்கவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அதன்படி, நாசா விண்வெளி ஆய்வு மையமானது மற்ற அமெரிக்க ஏஜென்சிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து சந்திரனை மையமாகக் கொண்ட நேரக் குறிப்பு முறையை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.
இவற்றின் உதவியுடன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒருங்கிணைந்த சந்திர நேரத்தினை (LTC) நிறுவுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பலவீனமான ஈர்ப்பு விசை
பூமியுடன் ஒப்பிடுகையில், சந்திரனிலுள்ள பலவீனமான ஈர்ப்பு விசையின் காரணமாக, சந்திரனில் நேரம் வேகமாக நகர்கிறது என்றும் ஒவ்வொரு நாளும் 58.7 மைக்ரோ விநாடிகள் வேகமாக சந்திரன் இயங்குவதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதன் காரணமாக விண்கலங்களுக்கிடையேயான பாதுகாப்பான தரவு பரிமாற்றம் மற்றும் பூமி, செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகள் என்பன ஒத்திசைக்கப்படுவதையம் உறுதி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
பூமியின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நேரம், அனைத்து நேர மண்டலங்களாலும் ஒத்திசைக்கப்படுகின்றன, இது உலகளாவிய ஒருங்கிணைந்த நேரம் எனப்படுகிறது, இது உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அணுக் கடிகாரங்களின் தொடர் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நேர அமைப்பு
இதே போன்றதொரு அங்கீகரிக்கப்பட்ட நேர அமைப்பை, சந்திரனுக்கு பயன்படுத்தி ஒருங்கிணைந்த சந்திர நேரத்தினை உருவாக்கவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறக்குவதற்கு முன்னதாக சந்திரனுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட நேர அமைப்பை நிறுவி முடிக்கப்போவதாக நாசா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |