பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துமாறு முதல்வர் மணிவண்ணனிடம் மகஜர் கையளிப்பு
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட உணவகங்களில் Lunch sheet பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துமாறு வழியுறுத்தி யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் அறம் அமைப்பினர் மகஜர் ஒன்றினை இன்றைய தினம் கையளித்திருந்தனர்.
யாழ். மாவட்டத்தை சேர்ந்த சமயத் தலைவர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர்,ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட 500 பேரைக்கொண்ட மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து கோப்பு மற்றும் குறித்த விடயம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையும் மாநகர முதல்வர் மணிவண்ணனிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
குறித்த சந்திப்பின் போது இத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதிலிருக்கும் சவால்கள் மற்றும் lunch sheet க்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தல் போன்ற பல மாற்றுத்திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன.
வெகுவிரைவில் மாற்றுத்தீர்வுகளுடன் lunch sheet க்கு பதிலாக வாழையிலை உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திகள் உணவகங்களில் உணவு விநியோகம் செய்யவும் பொதி செய்யும் பயன்படுத்தப்படுமென மாநகர முதல்வர் அறம் அமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார்.