முத்துஐயன் கட்டுக்கு விரைந்த தமிழரசுக்கட்சி! கண்டனங்களை வெளிப்படுத்தி இறுதி அஞ்சலி
புதிய இணைப்பு
முல்லைத்தீவு - முத்துஐயன் கட்டுப்பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த தெரிவிக்கப்படும் இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டபலரும் இந்த அஞ்சலி நிழக்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) - முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் மோசமாகத் தாக்கினர்
அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரின் சடலம் தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சட்டத்தின் முன் முன்னிலை
இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.
இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் காவல்துறையினரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
