தேராவில் துயிலும் இல்லத்தில் மனதை உருக்கும் சம்பவம் - 15 வருடங்களின் பின் பெற்றோர்கள் அஞ்சலி
புதிய இணைப்பு
தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (27.11.2024) கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உருத்துடையவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரரின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் அவர்களது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்தனர்.
முதலாம் இணைப்பு
மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், விசுவமடுவில் உள்ள தேராவில் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21.11.2024) பொதுமக்களால் பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி மாவீரர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஏற்பாட்டில் அந்த வட்டாரத்துக்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவித்து உரையாற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

