ஈழ விடுதலைப் போரில் விதையான மாவீரர்களின் தியாகம் வீண்போகாது - சிறீதரன் எம்.பி.
இன விடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காகத் தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண் போகாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான விலையை காலம் எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று (23) நடைபெற்ற போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஈழத்தமிழர்களின் இருப்பு
அவர் மேலும் தெரிவித்ததாவது, “இனத்தின் வரலாற்றை, தம் இருப்பை நிலைநாட்டுவதற்காக எமது இனத்தின் புதல்வர்கள் புரிந்திருக்கும் ஆகப் பெரும் தியாகத்தை இந்தத் தலைமுறை உணர வேண்டும்.
ஈழத்தமிழர்களின் இருப்பு உறுதிபடும் என்பதை உணர்ந்தவர்களாக, மாவீரர் மாண்பையும், அவர்களது பற்றுறுதிமிக்க தமிழ்த் தேசியக் கொள்கையையும், ஈழ விடுதலைப் போரின் நியாயாதிக்கங்களையும் உணர்ந்த சமூகமாக எங்களின் இளையோரைப் புடம்போடுவதே மாவீரர்களுக்கும், அவர்களை மடியீந்த பெற்றோருக்கும் நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்.
தங்கள் பிள்ளைகளை, இந்தத் தேசத்துக்காகத் தாரை வார்த்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு, தமிழ்த் தேசிய உணர்வு சிதையாவண்ணம் எங்கள் சந்ததியைச் செதுக்குவோம் என்ற உறுதியை வழங்குவதொன்றே நிறைவைத் தரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சிகப்பு மஞ்சள் கொடிகள்
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வினை நினைவு கூருவதற்கு தமிழர் தாயக பகுதிகளில் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமையப்பெற்ற இடங்களில் சிகப்பு மஞ்சள் கொடிகள் அந்த மாவீரர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றன.
முல்லத்தீவு நகரத்தின் சுற்றுவட்ட பாதை மற்றும் சந்தை விரைவான பகுதிகளில் சிகப்பு மஞ்சள் கொடிகள் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் எழுச்சி நாட்கள் மக்கள் நினைவேழுச்சியுடன் நினைவு கூர தயாராகிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |