இந்திய மராட்டிய மாநிலத்தில் அகோர வெயில் -25 பேர் சுருண்டு மடிந்தனர்
இந்தியாவின் மராட்டியத்தில் நடப்பு ஆண்டில் வெயில் தாக்கத்தால் 25 பேர் பலியானதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மராட்டியத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக துலே, நந்தூர்பர், ஜல்காவ் மற்றும் அகமது நகர், நாக்பூர் மற்றும் வடக்கு மத்திய மராட்டிய பகுதிகளில் நாளை முதல் 6-ம் திகதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் அதிக வெப்பம் காரணமாக மாநிலத்தில் இது வரையில் 25 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுகாதாரத்துறை அளித்த தரவுகளின் படி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் வெயில் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் கடந்த 1-ம் திகதி வரையில் வெயில் தாக்கம் காரணமாக 381 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக நாக்பூரில் 300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 25 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி வானிலை ஆய்வு மைய தலைவர் டொக்டர் ஜெயந்தா சர்க்கார் தெரிவிக்கையில், வடமேற்கு பகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரிக்கக்கூடும். இதனால் பொதுமக்கள் வெயிலில் நடமாட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
