நானுஓயாவில் நாய் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் : பதைபதைக்க வைக்கும் காணொளி
நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பில் நேற்றையதினம் (27) நானுஓயா காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தாக்கி, பின்னர் ஆற்றில் வீசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
அதனை தொடர்ந்து நாயினை வளர்த்து வந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
கொடூரமாக தாக்கப்பட்ட நாய்
கடந்த நாட்களில் நானுஓயாவில் சித்திரவதைக்கு உள்ளான நாய் அயலவர் வீட்டில் வளர்த்து வந்த பூனை ஒன்றினை கடித்ததாக தெரிவித்து பூனையை வளர்த்து வந்த வீட்டில் உள்ள இளைஞன் ஒருவன் குறித்த நாயை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
இதன் பின்னர் கிடைக்கப் பெற்ற காணொளியை அடிப்படையாகக் கொண்டு காவல்நிலையத்தில் நாயை வளர்த்தவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன் பின்னர் பூனையை கடித்ததன் காரணமாகவே நாயினை அடித்ததாக சம்பந்தப்பட்ட இளைஞனும் முறைப்பாடொன்றை பதிவு செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு சித்திரவதை செய்த நாய் தற்போது கால் ஒன்று உடைந்திருக்கிறது எனவும் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் நாயின் உரிமையாளருக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் நாயினை சித்திரவதை செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் நாயை தாக்கிய இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
