இலங்கையில் மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இலங்கையில் வெவ்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30)காலை நடைபெற்றுள்ளது.
காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை
இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் யாழ்ப்பாண நகரில் இடம் பெற்றது.
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் யாழ் மாநகர சபை ஆணையாளர் காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நிகழ்வில் காந்தியம் காலாண்டு பத்திரிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
பத்திரிகையை யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி வெளியிட்டு வைக்க யாழ் மாநகர சபை ஆணையாளர் பெற்றுக் கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |