மகிந்தவின் பதவி விலகல் - பிரதமர் அலுவலகம் முற்றாக மறுப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக தெரிவித்து கடிதத்தினை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில் அந்த தகவலில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி காபந்து அரசை அமைக்கும் நோக்கில் தானும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்ததை அடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் சில மணித்தியாலங்களில் தனது பதவியில் இருந்து விலகுவார் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
11 கட்சிகளின் கூட்டணி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு புதிய பிரதமரைக் கொண்ட அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என உறுப்பினர்களால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமர் பதவிக்கு நியமிக்க மஹிந்த இணங்கியுள்ளதாகவும் மஹிந்த மற்றும் கோட்டாபய இருவரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது
புதிய பிரதமராக தினேஷ் குன்வர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இருந்து பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

