எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வாவுக்கு இடையிலான முறுகல் நிலையை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தீவிரமடைய செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவி ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் விளைவாக, தனது தந்தை, அரசாங்கத்தின் ஆதரவுடன் துமிந்த சில்வாவால் கொல்லப்பட்டதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஹிருணிகா பிரேமசந்திர இதனை தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா உயர் நீதிமன்றத்தால் இன்று முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.
13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி எனது தந்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் மேலும் மூவர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
மகிந்தவின் நடவடிக்கை
இந்த தீர்ப்பை சவாலுக்குட்படுத்தும் வகையில் குற்றவாளிகளால் மனுத்தாக்கல் செய்யப்பட்டாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வாவுக்கு இடையிலான முறுகல் நிலையை பேசி தீர்க்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முயற்சிக்கவில்லை.
மாறாக அதனை குண்டுகளின் மூலம் தீர்க்க அவர் முயற்சித்தார்.
துமிந்த சில்வாவின் நம்பிக்கை
இந்த பின்னணியில், தான் கொலை செய்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியுமென்ற நம்பிக்கை துமிந்த சில்வாவுக்கு இருந்தது.
இதனாலேயே, அவர் எனது தந்தையை கொலை செய்தார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த கொலை செய்யப்பட்டது உண்மை.
அதிபர் பொதுமன்னிப்பு
இதையடுத்து, துமிந்த சில்வா அரசாங்கத்தின் உதவியுடன் வெளிநாடொன்றுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த பின்னணியில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் தனது அரசியல் பணிகளை மிகவும் சுதந்திரமாக முன்னெடுத்தார்.
கொலைக்கான நீதி
எனது தந்தையின் கொலைக்கு நீதி வேண்டுமென கோரி நாம் தொடர்ந்தும் போராடினோம். இன்னும் போராடி வருகிறோம்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக எனது தந்தை குரல் கொடுத்ததன் காரணமாக அவர் கொல்லப்பட்டார்.
வரலாறு தெரியாதவர்கள்
இதனை பலர் அறிந்திருக்கிறார்கள். எனினும், வரலாறு தெரியாத சிலர் தற்போது எனது தந்தையின் கொலை தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
துமிந்த சில்வாவுக்கான மரண தண்டனையை மீள உறுதிப்படுத்தி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எமது வெற்றியல்ல. எம்முடன் போராடிய மக்களின் வெற்றி” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |