அனைத்துக்கும் மகிந்தவே காரணம் -போட்டு தாக்குகிறார் சந்திரிகா
இலங்கை இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்து கடும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு மகிந்வே காரணமென முன்னாள் அரச தலைவர் சந்திரிகா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்படி 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் மோசடி, தனியார் வங்கிகளிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றுக்கொண்டமை என்பனவே இந்நிலைக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.
மேலும் மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைத்தமை மூலம் அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
இதேவேளை தனது ஆட்சிக் காலத்தில் மோசடிகளுக்கு இடமளிக்காதமையினாலேயே யுத்தத்திற்கு மத்தியிலும் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.
தனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள், ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் இதன் காரணமாகவே ராஜபக்ஷவினால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
