உள்ளூராட்சி நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு மஹிந்த பிறப்பித்துள்ள உத்தரவு
இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் பூர்த்திசெய்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு தீர்மானத்திற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் வைத்து இன்று இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றமைக்கு தீர்வு வழங்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் முறையாக நிறைவேற்றப்படாமையால் மக்களும் அரசாங்கமும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.
மக்களுக்கு அவ்வாறு துரித தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒதுக்கீடுகளை உரிய முறைகளுக்குஅமைய பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி சரியான முறைகளின் மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டங்களை செயற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
பல்வேறு அரச நிறுவனங்களுக்காக புதிதாக இணைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் ஊழியர்கள் நாட்டின் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
கொழும்பு நகரை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் படகு போக்குவரத்தை முறையான ஒழுங்குறுத்தல் முறையுடன் முறைப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.