ராஜபக்சக்களின் குடியுரிமை நிலைக்குமா! வலுக்கும் எதிர்ப்புக்கள்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவது பொருத்தமற்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தண்டனை வழங்க வேண்டும்
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“குடியுரிமையை இரத்து செய்வதற்கு அதிபருக்கு அதிகாரம் உள்ளதால், விசேட அதிபர் ஆணைக்குழுவொன்றை நியமித்து மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறித்த குழுவிடம் நட்டஈடு பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். நாட்டை வங்குரோத்து அடையச் செய்த கும்பலுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இனியும் இவர்கள் தொடர்வார்களா
இனியும் இவர்கள் இவற்றைத் தொடர்வார்களா என்று நாடு கேட்கிறது. எனவே, இவர்களுக்கு மேலும் குடியுரிமை வழங்குவது பொருத்தமற்றது.
உச்ச நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட குழுவின் குடியுரிமைகளை இரத்து செய்யும் நடவடிக்கை விசேட அதிபர் ஆணைக்குழுவின் ஊடாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு அதிபர் மட்டுமே செயற்பட முடியும்.
நாட்டின் 200 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சார்பாக அதிபர் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நாங்கள் பரிந்துரைக்கிறோம்"என தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததை தொடர்ந்து, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |