கனேடிய பிரதமரின் இனப்படுகொலை அறிக்கை - நிராகரிக்கும் மகிந்த..!
"போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தது உண்மை, அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது."
இவ்வாறு, 2009 ம் ஆண்டு நடந்த இறுதிப்போரின் போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மே 18 ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது.
நிராகரித்த மகிந்த

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும் மற்றும் இலங்கையில் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட தனது கருத்தில் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று முன்னாள் அதிபர் மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கனேடியப் பிரதமரின் அறிக்கை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள கருத்தை முழு மனதுடன் வரவேற்கின்றோம். உண்மை நிலைமையை அறியாது சர்வதேசத் தலைவர்கள் கண்டபடி அறிக்கைகளை வெளியிடக்கூடாது.
இலங்கையில் போர் நடந்தது உண்மை, அதில் விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் உயிரிழந்தது உண்மை.
மக்களும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததும் உண்மைதான், அதற்காக இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இனப்படுகொலை நடந்ததாக கனேடியப் பிரதமர் கூறுவதை அடியோடு மறுக்கின்றோம்." இவ்வாறு முன்னாள் அதிபர் மகிந்த தெரிவித்துள்ளார்.