மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை அதிரடியாகப் பறித்தெடுத்த உச்சநீதிமன்றம்!
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டமை தவறென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று(29) வழங்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அதிபராக பதவி வகித்த காலத்தில் கொழும்பின் ஆடம்பரக் குடியிருப்புகள் அமைந்துள்ள மஹகம சேகர மாவத்தை (பெஜட் வீதி)யில் இரண்டு ஆடம்பரக் குடியிருப்புகளை ஒன்றிணைத்து, நவீனமயப்படுத்தி அதனை உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தி வந்தார்.
அமைச்சரவைத் தீர்மானம் ரத்து
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு சற்று முன்னதாக ஒக்டோபர் 15ம் திகதி மைத்திரியின் தலைமையில் நடைபெற்ற கடைசி அமைச்சரவையில் தான் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தை பதவி ஓய்வின் பின்னரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டிருந்தார்.
இதன்போது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டின் ஒக்டோபர் 15ம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் ரத்துச் செய்யப்பட்டதுடன், மைத்திரிக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |