குற்றம் செய்யாமல் இழப்பீடு - மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளியாக தாம் எவ்வகையிலும் ஆக்கப்படவில்லை என்றும், மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் அதிபர், உரிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
54 ஆண்டுகால அரசியலில்
“அண்மையில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல. கடந்த 54 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கும் போது என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. அதனால் எனக்கு அது முக்கியமில்லை,'' என்றார்.
“எனக்கு எதிரானவர்கள், எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். எனக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இழப்பீடு மட்டுமே வழங்கப்பட உள்ளது. "எனவே அந்த இழப்பீடு வழங்குவதற்காக நான் இந்த நாட்களில் மக்களிடம் பணம் வசூலிக்கிறேன்". எந்தவொரு நீதிமன்ற உத்தரவினாலும் அல்லது எந்த விசாரணையினாலும் தாம் குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும் சிறிசேன கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் பின்னணியில்
இவ்வாறான பல பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற நாடுகளில் விசாரணை அறிக்கைகள் இறுதி செய்யப்படுவதற்கு 10-15 வருடங்கள் ஆகும் எனவும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர பல வருடங்கள் ஆகும் எனவும் வலியுறுத்தினார்.
“கத்தோலிக்க திருச்சபை அது என்ன நினைக்கிறது என்று சொல்கிறது. காலையில் ஒன்று, மாலையில் இன்னொன்று என்று கூறுகிறது. வாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்” என்று குற்றம் சாட்டினார்.
