கோட்டாபயவிடம் வருத்தம் தெரிவித்த மைத்திரி
பெருந்தொகையான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துச் சென்று அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதை விட, இந்த நேரத்தில் செய்ய வேண்டியது நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவுவதாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்துடன் இணைந்த 11 கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் செயற்படும் எனவும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கியமை தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச தலைவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று (8) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வருத்தம் தெரிவித்ததாகவும், அவரை நீக்கியமைக்கான காரணங்களை அரச தலைவர் முன்வைத்ததாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏன் அரசாங்கத்தை விட்டு வெளியேறவில்லை என சிலர் கேள்வி எழுப்புவதாக அவர் கூறினார்.
எனவே, அரசாங்கத்துடன் கலந்துரையாடி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புத்திசாலித்தனமான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியை உருவாக்கி நாட்டை மேலும் சீர்குலைத்து மக்களை ஒடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். .
