மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துக்குள் வந்த மைத்திரி! நீதிமன்றில் வழங்கப்பட்ட அதிர்ச்சி வாக்குமூலம்
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை தவறியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சியமளித்த அவர், தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் எனத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் அந்தத் தகவல்களை அறிந்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்குத் தாக்கல்
அத்துடன், அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவும் இந்தத் தகவல்களை அறிந்திருந்ததோடு, அதனை மறைக்கும் வகையில் செயற்பட்டதாகவும் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன்போது மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர், "பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி என்ற ரீதியில் நான் இந்த வழக்கிற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். நான் முன்வைத்த தகவல்கள் முறையாக ஆராயப்பட்டிருந்தால், என் மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்காது. இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் இன்னும் சுதந்திரமாகவே உள்ளனர்" என நீதிமன்றில் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |