அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் சஜித்துடன் மந்திராலோசனை
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான சில கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றையதினம் திகதியிட்ட கூட்டுக் கடிதத்தில், அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படும் பட்சத்தில் கட்சியின் மாற்றுத் திட்டத்தைத் தெரிவிக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரியுள்ளனர்.
முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டவுடன், சஜித் பிரேமதாசவுக்கு நாட்டின் ஆட்சிக்கான மாற்றுத் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அக்குழு, ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது தெரிவு செய்வதற்கு இரண்டு தெரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் முன்மொழியப்பட்ட இரண்டு தெரிவுகள் வருமாறு:
மகாநாயக்க தேரர்கள், மதத் தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர், ஆர்வலர்கள் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துக் கட்சி தேசிய அரசாங்கத்திற்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் இணையுங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றைய ஆளும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விருப்பமில்லாமல் இருப்பதால் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கைப்பற்ற முனைதல்.
நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளுவது மோசமான நிர்வாகத்தால் நடத்தப்படும் அரசாங்கத்தை விட மோசமானது என்று கூறிய அக்குழு, அரசாங்கம் கடன்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அத்தகைய நிலைமை நாட்டில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியது.
அரசாங்கம் தனது தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், இந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான காத்திரமான தீர்வை முன்வைக்க அரசாங்கம் இதுவரை தவறியுள்ளதாகவும் அதனால் நாட்டின் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளிட்ட ஆளும் கட்சித் தலைவர்களின் கையொப்பத்துடன் இன்று (5) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.


