மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிப்போம்! - முடங்குகிறது நாடு!
மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிப்போம் - மக்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்' என்ற தொனிப்பொருளில் இன்று (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், பொது நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.
இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு, 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
டீசல் இன்மையின் காரணமாக இன்று மாத்திரமின்றி எதிர்வரும் சில தினங்களுக்கும் தம்மால் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து புகையிரத சேவையும் ஸ்தம்பிதமடையும் என்று புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.
எனவே புகையிரத நிலையங்களுக்கு வந்து அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பயணிகளைக் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தை மீண்டும் பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அகில இலங்கை தபால் சேவை தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்களும் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு மருத்துவதுறை சார் தொழிற்சங்கங்கள் முழுமையான ஆதரவை வழங்கும் என அரச தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஹர்த்தால் போராட்டத்திற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளிப்பர். அதற்கமைய அதிபர் , ஆசிரியர்களை பாடசாலைகளுக்குச் செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சகல மீனவர் சங்கங்களும் ஹர்த்ததாலுக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் செயற்படும் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

