அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல்! அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
இலங்கையில் (Sri Lanka) அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapakse) பொதுத் தேர்தல் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல்
இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தற்போது பல அரசியல்வாதிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பொதுத்தேர்தலை முதலில் நடத்துமாறு வலியுறுத்துவதாகவும் இதனூடாக அதிபர் தேர்தலுக்கு முன்னர் மக்கள் பலத்தை மேம்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், இலங்கையில் முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதை அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
அரசியலமைப்புக்கமைய, அதிபர் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், சிறிலங்காவின் அதிபராக நாடாளுமன்றத்தை கலைக்கவும் பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுக்கவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரமுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |