விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்! பெரும்தொகை சிகரட்டுக்கள் மீட்பு
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பெரும்தொகை சிகரெட்டுகளை காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சிகரெட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
காவல்துறை விசேட அதிரடிப் படை தலைமையகத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினருக்கு, கடற்படை புலனாய்வு பிரிவினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் வத்தளை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்று சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிகரட்டின் பெறுமதி 14 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
