கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட இளைஞன்: வெளியான காரணம்
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து இளைஞன் ஒருவரை வெள்ளை வானில் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிபவர் என்பது தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரண்டு வாடகை வண்டி சாரதிகளால் குறித்த இளைஞர் கடத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குருநாகல், மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு கமரா காட்சிகள் ஆய்வு
கடத்தல் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் வானை அடையாளம் கண்டுள்ளனர்.
அதற்கமைய,ஓட்டுநர்கள் இருவரும் தங்கியிருந்த பகுதியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் சோதனை நடத்தினர்.

இதன்போது குறித்த இளைஞன் அறை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று பார்த்த போது சாரதிகள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளை பாவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
தம்புள்ளை மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த சாரதிகள் இருவரிடமும் 4 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரும் கட்டுநாயக்க பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞன் தவறுதலாக கடத்தப்பட்டதாக சந்தேக நபர்களான சாரதிகள் இருவரும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சாரதிகளையும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்