மண்டைதீவு சுற்றுலா மைய விவகாரம்! நிதித் முறைக்கேடு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!
வேலணை - மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீ.வ.க முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதனால் இந்த முறைப்பாடு இன்று (11) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட "எக்கோ ரூறிசம்" திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா மையத்தின் உருவாக்கல்
முறைப்பாட்டில் அன்றைய யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன், அன்றைய காலப் பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக இருந்த சுகுணாரதி தெய்வேந்திரம் மற்றும் அ.சோதிநாதன் ஆகியிரால் வேலணை பிரதேசத்திற்கு சுமார் 77 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பின் கருத்துத் தெரிவித்த பிரகலாதன், குறிப்பாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே இறங்கு துறையை அமைப்பதற்காக 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யபட்டது.
2016 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பொருட்கள் கடந்த பல வருட காலமாக வேலணை கடற்கரையில் பாவனையின்றி அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாது இத்திட்டம் தோல்வியடைந்து அல்லது மோசடிகளால் பாதிக்கப்பட்டதை அன்றிருந்த பிரதேச செயலர் மூடி மறைத்துவந்தார்.
குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் முடக்கிவிடப்பட்ட நிலையில் அன்றிருந்த மாவட்ட செயலளர் வேதநாயகன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முற்றாக மறைத்து தனது அதிகாரிகளை பாதுகாத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது அதிகாரங்களை பிரயோகித்து 2020 ஆம் ஆண்டு அந்த பொறுப்பை வேலணை பிரதேச சபையிடம் திணித்து பொறுப்பேற்கச் செய்தனர்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |