சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (21) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற போது குறித்த "சூழலியல் சுற்றுலா" (Ecotourism) குறித்து பல்வேறு பிரச்சினைகள் சபையில் விவாதிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேலணையில் அபிவிருத்தியையும், சுற்றுலா வலயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுலாவிகளுக்காக சுமார் 77 மில்லியன் செலவில் சுற்றுலா அமைச்ச்சினால் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த மண்டைதீவு சுற்றுலாத்தளமாகும்.
வருமானம் இழக்கப்பட்டுள்ளது
ஆனால் அது முறையற்ற பொறிமுறையாலும் சரியான பராமரிப்பின்மையாலும் சபைக்கான வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன் எதிர்பார்த்த இலக்கை எட்டாது திட்டமும் முழுமையாகத் தோற்றுவிட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட படகுகள் அதுசார் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் உரிய பராமரிப்பின்றி முழுமையாக சேதமாகிக் கிடக்கின்றது.
மாறாக பல உபகரணங்கள் சூறையாடப்பட்டுள்ளதுடன், அது இன்று மதுபோதை அருந்தும் திடலாகவுள்ளதுன் சமூகசீரழிவுக்கான களமாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
வேலணை பிரதேச சபை
குறிப்பாக வேலணைக்கு அப்பால் வெளி இடங்களிலிருந்து சுற்றுலாவாக அல்லாது சமூக சீர்கேட்டை மையமாகக் கொண்டே அதிகமானோர் இங்கு வருவதாக பலரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இதனால் எமது பிரதேசத்தின் மாண்பு பாதிக்கப்படுவதுடன், பிரதேசத்தின் நற்பெயருக்கும் இழுக்கு ஏற்படுகின்றது. இவ்வாறு உருவாகிவரும் இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான தார்மீக பொறுப்பு வேலணை பிரதேச சபைக்கே இருக்கின்றது.
எனவே சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையத்தை தற்போது வர்த்தக நோக்குடன் பராமரித்து முன்னெடுக்கும் தனியாரிடமும் இவ்விடயம் குறித்து விசரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் இழந்த வருமானத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |