ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்களை கைது செய்ய உத்தரவு
பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிக வலுக்கொண்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த வாகனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
காவல்துறையினருக்கு பணிப்புரை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள்கள் என்பது ஒருவரது பயண வசதிக்காகவே தவிர, பிரதான வீதிகளில் பந்தயங்களில் ஈடுபடுவதற்கோ, பாதசாரிகளை ஆபத்தில், தள்ளுவதற்கோ அல்லது ஒழுக்கத்துடன் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கோ அல்ல. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள இந்த கலாசாரம் மிகவும் பயங்கரமானது.

எனவே, அதிக வேகத்துடன், அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளோம். தற்போது 18 வயதுக்கும் குறைந்தவர்கள் கூட மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாகச் சென்று ஏற்பட்ட விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக்கிரியை ஊர்வலத்திலும் பலர் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணித்தனர்.

இளைஞர்களின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது அல்ல. எனவே, சட்டத்தை மிகக் கடுமையாக நிலைநாட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோதமான அதிக வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை உடனடியாகக் கைப்பற்றி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவற்றை அரசாங்க உடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |