நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கட்டுப்பாடு! இராஜாங்க அமைச்சர் தகவல்
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் தமது தொழிலிற்கான அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும் எனும் நடைமுறையினை கட்டாயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொதுபோக்குவரத்து சேவையினை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
முறையற்ற விதத்தில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது.
அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளமையால், அவர்களது போக்குவரத்தினை மாத்திரம் கருத்தில் கொண்டே பொது போக்குவரத்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.