இலங்கையில் முதியோர் இல்லங்களுக்கு கடுமையாகும் சட்டம்
நாட்டில் உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டிய பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
முதியோர் இல்லங்களில் பாதுகாப்பு
இதன்படி, நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் எனவும், பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதியோர் இல்லங்களில் சில நிறுவனங்கள் மிகச் சிறந்த மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்தபோதிலும், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு மற்றும் தேவையான ஊழியர்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய தரமற்ற நிறுவனங்களை எதிர்காலத்தில் நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும் அங்கு 10,000க்கும் மேற்பட்ட முதியோருக்குப் பராமரிப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 21 மணி நேரம் முன்