மன்னார் இனி எரிசக்தி மையமாக்கப்படும் - அதிபர் ரணில்
மன்னார் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கதக்கசக்தி திட்டங்கள் தொடர்பாக மக்கள் தமது எதிர்ப்புக்களை பதிவு செய்துவரும் நிலையில், மன்னாரை எரிசக்தி மையமாக உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (15) மன்னார் மடு மாதா தேவாலயத்தின் கூட்டுத் திருப்பலி வழிபாடுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே அதிபர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ,
மன்னாரில் வலுச்சக்தி மையம்

"மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும்.
இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்க முடியும். அதே நேரம், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன்.
அருட்தந்தைகளின் ஆலோசனைகளும் கேட்கப்படும்
மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.
அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடரூந்து சேவை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுகிறது.
வவுனியாவில் சீனி தொழிற்சாலை
மேலும் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.