அரசால் கைவிடப்பட்ட நிலை! கவலை வெளியிட்டுள்ள மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்
நாடு முழுவதும் அண்மையில் பாரிய உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்திச் சென்ற டிட்வா புயலினால் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை யாரும் தம்மை வந்து பார்த்து தமக்கு எவ்வித உதவிகளும் வழங்க முன்வரவில்லை என மன்னார் பனங்கட்டுகொட்டு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்,யாரும் வந்து தம்மை பார்த்து பாதிப்புகள் தொடர்பாக கேட்கவில்லை என்றும் எந்த ஒரு நிவாரணங்களும் தரவில்லை என்றும், அரசால் கைவிடப்பட்டுள்ளது போல் உணர்கிறோம் என குறித்த கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிலுக்குச் செல்ல இயலாத நிலை
ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு சென்றால் மட்டுமே எங்களுக்கு சாப்பாடு. இனி ஒரு மாசத்துக்கு கடலில் தொழிலுக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.
மேலும், எந்த அரச நிறுவனம், அமைச்சர்கள், ஆளுநர், அதிகாரிகள் எம்மை வந்து சந்திக்கவும் இல்லை என்றும், தங்களுடைய குறைகளை கேட்கவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

“கடந்த புயல் வெள்ளத்தின் போது எமது படகுகளை கொண்டு சென்று எத்தனை நபர்களை காப்பாற்றிய எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இல்லை.
மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆடு ,மாடு விலங்குகள் மனித உடல்கள் போன்ற கழிவுகள் எல்லாம் எமது கடல் பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.
அதனால் எமது கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு போவதில்லை .இவ்வாறு சென்றாலும் மீன் கிடைப்பதில்லை.
கடல் முழுவதும் சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. எமது படகுகள், வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மக்களுக்கு தங்களது சங்கத்தின் மூலம் நாங்கள் கடன் எடுத்துக் கொடுத்திருக்கின்றோம்” என கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |