மன்னார் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும்!
மன்னார் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய எச்சங்கள் தொடர்பான பிரித்தெடுத்தல் நடவடிக்கை அல்லது அகழ்வு பணி சம்பந்தமான கலந்தாலோசனையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கான அறிவித்தல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (25) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர். குறித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு விசாரணை இடம் பெற்று வந்த நிலையில், கடந்த 10. 03. 2020 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தோன்ற முடியாது என்றும் மன்றில் முன்னிலையாக முடியாது என்றும் கட்டளை ஒன்று ஆக்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டளைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நாங்கள் மீளாய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தோம். குறித்த மனு தொடர்பாக இவ்வருடம் பெப்பிரவரி மாதம் 22 ஆம் திகதி எமக்கு சார்பான கட்டளை ஒன்று ஆக்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டளையானது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களினால் வழங்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எந்த நேரத்திலும் தோன்றலாம், வாதாடலாம் என்கின்ற அடிப்படையில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.கணேசராஜா அவர்களினால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியற்றதாக்கப்பட்டு மீண்டும் இந்த சதொச மனித புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாக முடியும் எனும் கட்டளைக்கு அமைவாகவும், இன்னும் பல கட்டளைகள் ஆக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 22-02-2022 அன்று கட்டளை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக குறித்த மனித புதை குழியின் அகழ்வுப் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் 10 பேர் இதனைப் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 10 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படையில் இதன் இறுதி தீர்மானங்களை மன்னார் நீதவான் நீதிமன்றம் எடுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் சட்ட வைத்திய அதிகாரியோ, தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து பேராசிரியரோ மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. மன்னார் காவல்துறையினர் சமர்ப்பணம் ஒன்றைச் செய்திருந்தார்கள்.
தங்களுக்கு எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 06 ஆம் திகதி மன்றில் முன்னிலையாக முடியும் என்றதன் அடிப்படையில் நேற்று (25) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இதற்கான தவனையிடப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரனித்தா ஞானராஜ் ஆகியோர் முன்னிலையாகி இருந்தோம்.காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதனி அவர்களும் முன்னிலையாகி இருந்தனர். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
