கோட்டாபயவின் சுதந்திர தின உரையினை கேட்க சிரிப்புத்தான் வந்தது! மனோ கணேசன் கிண்டல் (படங்கள்)
தெற்கில் உள்ள நபர்களில் அரச தலைவர் முதன்மையானவர். அவரின் சுதந்திர தின உரையை செவிமடுக்கையில் சிரிப்புதான் வந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஆலய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவவ்ாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு, முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோட்டாபய அழைப்பு விடுக்கின்றார். ஆனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது. கோட்டாபய ஆட்சியில் அவர்கள் இங்கு வருவார்களா? வரமாட்டார்கள். எனவே, சஜித் பிரேமதாச தலைமையில் அமையும் ஆட்சியில் நாம் நிச்சயம் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்போம்.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. அனைவரும் ஒன்றிணைந்தால் தான் நாடு முழுமைப்படும். அதுவரைக்கும் இந்த நாடு உருப்படாது.
நாம் அனைவரும் இலங்கையர்கள். அதற்கு பிறகுதான் இனம் எல்லாம் வரும். 13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் முழு தீர்வாக ஏற்கவில்லை. அதேபோல சிங்கள மக்களின் ஆசியின்றி தீர்வை பெறமுடியாது.
இது எனக்கு மட்டுமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கும் தெரியும். எனவே, இருப்பதையும் இழக்காமல், முன்னோக்கி செல்வோம் என்பதை விசயம் புரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


