வாக்காளர்களுக்கான மை பூசும் செயற்பாடு நிறுத்தம்
நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் தேர்தல்களுக்கான சட்ட விதிகளின்படி, 2004 முதல் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள், செல்லுபடியாகும் அடையாள அட்டை மூலம் தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பது கட்டாயமாகும். மேலும், அவ்வாறு வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களும் அழியாத மை கொண்டு உரிய விரலில் அடையாளக்குறியைப் பெறுவதும் கட்டாயமாகும்.
அரசாங்கத்திற்கு மேலதிக செலவு
இந்த இரண்டு செயல்பாடுகளின் நோக்கமும், ஒரு வாக்காளர் ஒரே தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிப்பதைத் தடுப்பதே ஆகும்.

ஒரே நோக்கத்தை அடைவதற்காக ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு முறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பது, வாக்குச்சாவடிகளில் செய்யப்படும் பணிகளின் செயல்திறனைத் தடுப்பதோடு, அரசாங்கத்திற்கு மேலதிக செலவுகளையும் ஏற்படுத்துகிறது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
சட்ட விதிகளை நீக்குவது பொருத்தமானது
எனவே, அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும், அழியாத மையைப் பயன்படுத்தி வாக்காளருக்கு உரிய குறியிடுவது தொடர்பான சட்ட விதிகளை நீக்குவது பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது என்பதை ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

அதன்படி, பின்வரும் சட்ட விதிகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகக் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு
1988ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு
(262 ஆம் அத்தியாயமான)உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ. பிரிவு
1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |