மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்..! ரஷியப் படையினரின் கோர தாண்டவம் அம்பலம்
ரஷ்ய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களின் உறுதியான அடையாளமாக மூன்றாவது மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் இரண்டு புதை குழிகளும் போரின் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டாலும் தற்போது கண்டு பிடிக்கப்பட்ட மூன்றாவது புதைகுழி மிகவும் மோசமான புதைகுழி என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
உக்ரைன் இராணுவம் வெளியிட்ட அறிக்கை
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷியா கைப்பற்றிய பல இடங்களை தற்பொழுது உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார்.
அப்போது உக்ரைனின் இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் ரஷ்ய படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இவை என உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபரின் கருத்து
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, " ரஷியா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.
மீட்கப்பட்ட நகரங்களை ஆய்வு செய்தேன். ரஷியப் படையினர் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
இசியம் நகரில் மிகப்பெரிய குழியில், 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. போர் விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினர் கொன்று குவித்துள்ளனர்.
ரஷியாவின் போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம்.
கொலை செய்யப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது", எனக் குறிப்பிட்டார்
