இலங்கையில் இருந்து கடல் வழியாக பாரிய தங்க கடத்தல் - கடலுக்குள் இருந்து மீட்கப்பட்ட தங்க கட்டிகள்
இந்திய கடலோர காவல்படையினர், சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், தமிழக மண்டபம் கடற்கரையில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டசுமார் ரூ.10.5 கோடி மதிப்புள்ள 17.74 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
வியாழக்கிழமை வௌியான அதிகாரபூர்வ அறிக்கையின்படி, சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில், தமிழகம் மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல்படை நிலையம் பெப்ரவரி 7 அன்று இடைமறிப்பு படகு (ஐபி) சி-432 இல் ஒரு கூட்டுக் குழுவை அனுப்பியது.
இரண்டு நாட்களாக கண்காணிப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்ததா என இரண்டு நாட்களாக இக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெப்ரவரி 8ம் திகதி இரவு சந்தேகப்படும்படியான படகு ஒன்று அதிவேகமாக தப்பிச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அந்தப்படகை மறித்து சோதனையிட்டபோது கடத்தல் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் இடைமறிக்கும் போது அந்த படகிலிருந்து பொருள் ஒன்று வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
17.74 கிலோ தங்கம் மீட்பு
குறித்த கடற்பகுதியில் ஐசிஜி குழுவினர் குதித்து தேடியவேளை, கடலுக்கு அடியில் இருந்து 17.74 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.
மீன்பிடி படகு மற்றும் மூவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மண்டபம் கடற்கரை பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.