வவுனியாவில் பெண் ஊடகவியலாளரின் வீட்டில் பட்டப்பகலில் பாரிய கொள்ளை(photos)
வவுனியாவில் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு பட்டப்பகலில் உடைத்து பணம், நகைகள், கமரா என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி அறிக்கையிடல் ஒன்றுக்காக காலை 10.50 மணிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
கணவர் வர்த்தக நிலையத்திற்கும் பிள்ளைகள் தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளர் மதியம் 12.15 மணியளவில் கடமை முடிந்து தனது பிள்ளையுடன் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து காணப்பட்டுள்ளது.
வீட்டின் இரு அறைகளிலும் காணப்பட்ட அலுமாரிகள் உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களும் பரவிக் காணப்பட்டுள்ளன. அத்துடன், வீட்டில் இருந்த சங்கிலி, மோதிரம், கைச்செயின், தோடு உள்ளிட்ட 14 பவுண் நகைகள், 42 ஆயிரம் ரூபாய் பணம், கமரா, தொலைபேசி, பென்ரைவ் உள்ளிட்ட பல லட்சம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தன.
இதனையடுத்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர், வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் காவல்துறையினர் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





