மகனின் உயிரை காப்பாற்ற பரிதாபமாக உயிரிழந்த தந்தை
புத்தளம் - மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளிய, 10 கன்வன்வ பிரதேசத்தில் பாடசாலை பேருந்தில் தனது மகனை பாடசாலை பேருந்தில் ஏற்றிச்செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த தந்தையொருவரே விபத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று (09) காலை வேகமாக வந்த கார் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம்
இதன் போது வேகன்ஆர் ரக கார் ஒன்று அதிவேகமாக வருவதைக் கண்ட தந்தை உடனடியாக நடவடிக்கை எடுத்து, மகனைக் கையால் தள்ளி காப்பாற்றியுள்ளார்.அதேநேரம் தந்தை அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கார் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாரதியின் நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய காவல் நிலைய கட்டளைத் தளபதி காமினி விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |