மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் - துயிலும் இல்ல பணிக்குழுவிடம் வாக்குமூலம் பதிவு
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரை முள்ளியவளை காவல் நிலையத்திற்கு அழைத்த காவல்துறையிப்பினர் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்களான கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன்,திருச்செல்வம் இரவீந்திரன், தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர்கள் ஞானதாஸ் யூட் பிரசாந், பாஸ்கரன் வனஜன் ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரையும் இன்று காவல் நிலையம் வருமாறு காவல்துறையினர் வீடுகளுக்கு சென்று நேற்று அழைப்பு விடுத்துள்ளனர் இந்நிலையில் தற்போது குறித்த ஆறு பேரும் முள்ளியவளை காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
வாக்குமூலம் பதிவு
வாக்கு மூலத்தில் கடந்த 2022.11.27 அன்று நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக 26 ம் திகதி மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில் தமிழீழ வரைபடம் துப்பாக்கி மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் சில காணப்பட்டமை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பணிக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், ''நாம் குறித்த வளைவு ஏற்கனவே 2019 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செய்தபோது குறித்த வளைவே இருந்தது அது தொடர்பில் எந்த விடயமும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
நீதிமன்ற நடவடிக்கை
ஆகவே அதே வளைவையே நாம் இம்முறையும் அமைத்தோம். காலை 8.30 மணிக்கு முதல் நாங்கள் அகற்றுவதற்கு இணக்கம் தெரிவித்து இரவே அந்த சின்னங்களை தீந்தை பூசி மறைத்திருந்தோம் காலை அதனை மாற்றம் செய்ய முன்னர் காவல்துறையினர் அதனை அவர்களாகவே வந்து அகற்றினர்.''என வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலேயே குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.