இலங்கையில் வெடித்த கலவரம் - புதிய விசாரணை ஆணைக்குழு களமிறக்கம்
புதிய விசாரணை ஆணைக்குழு
இலங்கையில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்து வகையான குற்றச் செயல்களையும் விசாரிக்க புதிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற தீ வைப்பு, கொள்ளைகள், கொலைகள் மற்றும் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றங்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு விசாரணை செய்யும் என அரச தலைவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்திற்கு முன்னால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வாகனங்கள் தீயிடப்பட்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
மே - 9 கலவரம்
அத்துடன் மே மாதம் 09 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஒன்று திரண்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமவின் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடாவிய ரீதியில் வன்முறைகள் ஏற்பட்டிருந்ததுடன், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்கள் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பீ.அலுவிஹாரே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அரச தலைவரது ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
