ஊடக தணிக்கை எமது கொள்கையல்ல - அரசாங்கம் திட்டவட்டம்
ஊடக தணிக்கை தமது அரசின் கொள்கையல்ல எனவும் அவற்றை மேற்பார்வை செய்வதற்கான வழிமுறையையே முன்னெடுக்க உள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக பட்டய ஊடக கற்கைக்கான நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதமளவில் பட்டய ஊடக நிறுவனம் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகைப் பேரவை சட்டத்தை திருத்த 2021 இல் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், பல்வேறு அமைச்சர்கள் இதனை மாற்ற முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுக்கமைய மக்கள் கருத்து பெறப்பட்டதோடு 22 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
2002 இல் குற்றவியல் சட்டத்தை நீக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்த முடிவு ஊடகத்துறையில் வரலாற்று முக்கியமான தீர்மானமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் உள்ளிட்ட சகல தரப்பும் இணைந்து ஊடகத்தை தணிக்கை செய்வது எமது முடிவல்ல - தணிக்கையன்றி மேற்பார்வையே தமது கொள்கையாகும் என அவர் கூறியுள்ளார்.
சிவில் அமைப்புகளுடன் இணைந்து மேற்பார்வை செய்யக்கூடிய வழிமுறையையே மேற்கொள்ள இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
