மன்னார் கடற்கரையோரம் கரையொதுங்கும் மருத்துவ கழிவுகள் -மக்கள் அச்சம்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கடற்கரை ஓரங்களில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை மருத்துவ பொருட்கள் சில கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்கள் அதனை சேகரித்ததோடு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த கடற்கரையோரங்களில் கிறீம்கள்,ட்யூப்கள்,மாத்திரை பைக்கற்றுகள், பாவிக்கப்பட்ட ஊசிகள் போன்றவை இவ்வாறு கரையொதுங்கியுள்ளன. இந்த மருத்துவ கழிவு பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் என்.பவநிதி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
இந்த மருத்துவ கழிவு பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கிய கப்பலில் இருந்து வெளி வரும் கழிவுப் பொருட்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. குறித்த மருத்துவ கழிவு பொருட்களை கடற்கரை தூய்மையாக்கல் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இவை இந்தியாவின் மருத்துவ கழிவு பொருட்கள். தற்போது தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் இவ்வாறான கழிவுப் பொருட்கள் மன்னார் மாவட்ட கடற்கரையயோரங்களில் கரையொதுங்குகின்றன. இது தொடர்பில் மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.


