பாரிய அரசியல் விவாதத்திற்கு தயாராகும் சஜித் மற்றும் அனுர
புதிய இணைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அனுரகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இன்றைய தினத்திற்கு பின்னர் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அதிபர் தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் இந்த விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith Premadasa) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) இடையிலான அரசியல் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விவாதமானது இன்று (06) முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சுயாதீன தொலைக்காட்சி சேவை ஒன்றின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன (Sudarsana Gunawardena) இரு தரப்பினருக்கும் விவாத ஒளிபரப்பு தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
பொது விவாதம்
அத்தோடு, கடந்த (21.03.2024) அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பரிந்துரைத்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பகல் நேர செய்தி ஒளிபரப்பு மற்றும் பிரதான செய்தி ஒளிபரப்பிலும் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.
இதனடிப்படையில், இன்று இரவு 10.00 மணி முதல் விவாதத்தை நடத்துவதற்கு கடந்த இரண்டு மாதங்களாக தனது செய்தி ஒளிபரப்புகளில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் அர்ப்பணிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |